சென்னையில்
காலரா பரவியுள்ளது” என்ற செய்தி வெளியாவதில் ‘சதிச் செயல்’ உள்ளது என
சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அதாவது, சென்னையில் சதிச் செயல் காரணமாக
காலரா பரவவில்லை; காலராவே இல்லாத சென்னையில் நோய் பரவியுள்ளதாக
கூறப்படுவதுதான் சதிச் செயல் என்பதே, மாநகராட்சியின் ஸ்டான்ட்.
சென்னை மாநகராட்சியின் இணையத் தளத்திலேயே,
கடந்த ஜனவரியில் இருந்து கடந்த மாதம்வரை 29 பேர் காலராவில் இறந்துள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாத காரணத்தால்
ஏற்பட்ட காலரா மரணங்கள் அவை என்கிறார், மேயர் சைதை துரைசாமி.
அது என்ன விவகாரம் என்றால், குறிப்பிட்ட 29
பேரும் இறந்த காரணம் Cardiac Arrest என்று ஆவணங்களில் எழுதப்பட்டு
இருந்ததாம். அதை இணையத்தில் பதிவு செய்த ஊழியர்கள் Cholera என்று பதிவு
செய்துவிட்டார்கள் என்கிறார் மேயர். இதிலும் ‘இனம் தெரியாத சதி’
நடந்திருக்கலாம் என்கிறார் அவர்.
தற்போது, இந்த சதிச் செயல்களை யார்
செய்திருக்கலாம் என்பதை துப்பறிந்து கண்டுபிடிக்க, மாநகராட்சி விஜிலென்ஸ்
அதிகாரிகள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். சி.பி.ஐ. விசாரணைகளே
ததிங்கிணத்தோம் போடும் நாட்களில், மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகள்
‘சதிகாரர்களை’ கண்டு பிடிப்பார்களா என்பது தெரியவில்லை.
கடந்த ஒரு மாத காலமாகவே சென்னையில்
காலாராவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தம்மிடம் சிகிச்சைக்கு வருவதாக தனியார்
டாக்டர்கள் சொல்கிறார்கள். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
காலராவுக்கு சிகிச்சை பெற்ற இருவர் இறந்துள்ளனர். ஆனால், அவர்கள் சிறுநீரக
கோளாறு காரணமாக, இறந்தார்கள் என்கிறது மாநகராட்சி.
நல்லவேளையாக, “மாநகராட்சியின் இணையத்தளத்தை பார்த்த அதிர்ச்சியில் மரணமடைந்தார்கள்” என்று சொல்லவில்லை.